கனடாவின் இந்தப் பகுதியில் கடும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் வெப்பநிலை அதிகரிக்கப் போவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
வின்னிப்பெக் உள்ளிட்ட தெற்கு மனிடோபாவின் பல பகுதிகளுக்காக வெப்பஅறிவிப்பு வெளியிட்டது.
கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற ஆணையம் (Environment and Climate Change Canada - ECCC) இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த வாரம் ஞாயிறு முதல் செவ்வாய் கிழமை வரையில், பகல்நேர வெப்பநிலை 30°C முதல் 35°C வரையிலும், இரவு நேரம் குறைந்தபட்சம் 16°C அல்லது அதற்கு மேலாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள், வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெப்ப சோர்வு அறிகுறிகளில் தலைவலி, மயக்கம், வாந்தி, அதிக தாகம் மற்றும் உடல் சோர்வு ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தில் பாதுகாப்பாக இருக்க, அதிகளவு தண்ணீர் குடிக்கவும், குளிரூட்டி அல்லது விசிறியை இயக்கவும்இலகுவான மற்றும் தளர்ந்த உடைகளை அணியவும் பரிந்துரைக்கப்படுகிறது.
வெளியே செய்ய வேண்டிய வேலைகளை அதிகம் வெப்பம் இல்லாத நேரங்களில் திட்டமிடவும், நேரடியாக சூரிய ஒளியைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வெப்பஅறிவிப்பின்போது வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலக்குறைவானவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.