உக்ரைனுக்கு நிதி உதவி ; ரஷ்யா பெண் பத்திரிகையாளருக்கு கடூழிய சிறை
உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு (Darya Shipacheva) 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மொஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடத்தப்பட்டது. உக்ரைன் நாட்டுக்குப் பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2025இல் கைது செய்யப்பட்டார்.

குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் சிறை
இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது தர்யா ஷிபச்சேவா தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. அறிவியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த செய்தியாளரான தர்யா ஷிபச்சேவா, ரஷ்யாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியுள்ளார்.
ரஷ்யாவில் தொடரும் ஊடகக் கட்டுப்பாடு உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியது முதல், ரஷ்யா தனது நாட்டில் ஊடகத் தணிக்கைச் சட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
'பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு' (CPJ) வெளியிட்ட தகவல்களின்படி, ரஷ்யாவில் இதுவரை 29-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்களின் பணி மற்றும் செய்தியளித்தல் தொடர்பான காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.