கனடாவில் முக்கிய சிறுவர் சுரண்டல் குற்றச்சாட்டில் 46 வயது நபர் கைது
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் காக்ரேன் பகுதியில், நெருங்கிய துணைக்கு எதிரான வன்முறை தொடர்பாகத் தொடங்கப்பட்ட விசாரணை, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுவர் சுரண்டல் மற்றும் பாலியல் குற்ற வழக்ககாக உருவெடுத்துள்ளது.
இது தொடர்பாக 46 வயது நபரைக் காவல் துறையினர் கைது செய்து பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த மே 17 அன்று, முன்னாள் துணைவியார் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஒன்டாரியோ மாகாணக் காவல் துறை விசாரணையைத் தொடங்கியது.
இந்த விசாரணையில், பாதிக்கப்பட்டவர் சிறுமியாக இருந்த காலம் முதலே பல ஆண்டுகளாக இந்த அத்துமீறல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது அம்பலமானது.

கைது செய்யப்பட்ட நபர் மீது பின்வரும் பலத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
பாலியல் சுரண்டல், கணினி மூலம் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை வலைவீசி ஈர்த்தல், சட்டவிரோதமாகச் சிறைப்பிடித்தல், குற்றவியல் துன்புறுத்தல் மற்றும் உளவு பார்த்தல், பாலியல் குறுக்கீடு மற்றும் குடும்பத் தாக்குதல், கடுமையான தாக்குதல் மற்றும் 3 பிரிவுகளின் கீழ் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பிணை விசாரணைக்குப் பிறகு, காக்ரேனில் உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜராகும் நிபந்தனையுடன் அந்த நபர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். விசாரணை தீவிரமடைந்த நிலையில், பழைய பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான கூடுதல் ஆதாரங்களைக் காவல்துறையினர் சேகரித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, டிஜிட்டல் சேமிப்பக சாதனம் ஒன்றைக் கைப்பற்றி, பொலிஸாரின் டிஜிட்டல் தடயவியல் குழு பகுப்பாய்வு செய்தது. இதன் அடிப்படையில், ஜூலை 28 அன்று அதே நபர் மீது குழந்தை ஆபாசப் படங்களை உருவாக்குதல், வைத்திருத்தல் மற்றும் வெளியிடுதல் ஆகிய கூடுதல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் உதவி மற்றும் வழிகாட்டுதலுக்கு காக்ரேன் மாவட்டப் பாதிக்கப்பட்டோர் சேவை மையத்தின் 24 மணி நேர அவசர உதவி எண்ணை (1-877-264-4208) தொடர்பு கொள்ளலாம் என்றும், அவசர நிலைகளில் உடனடியாக 911 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.