கனடாவில் இரத்த தானம் செய்வோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு
டிசம்பர் மாதத்தின் இறுதி வாரங்களில் இரத்தம் மற்றும் பிளாஸ்மா தானம் வழக்கமாக குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடியர்கள் உடனடியாக இரத்த தானத்திற்கு முன்வர வேண்டும் என்று கனடிய இரத்த சேவை அழைப்பு விடுத்துள்ளது.
விடுமுறை காலத்திலும் நோயாளிகளின் தேவைகள் மாற்றமின்றி தொடர்வதால் இந்த நிலை கவலைக்கிடமானதாக உள்ளது.

இரத்தம் மற்றும் பிளாஸ்மா தானம்
ஆண்டு இறுதி பயணங்கள், அரச விடுமுறைகள் மற்றும் தினசரி நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தான மையங்களில் முன்பதிவுகள் குறைவதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
இரத்தப் பொருட்கள் நீண்ட நாட்கள் சேமிக்க முடியாதவை என்பதால், இந்த சவால் மேலும் தீவிரமடைகிறது. இந்த காலகட்டத்தில் மக்கள் வேலை, நண்பர்களுடன் கூடல் போன்ற பல பழக்கங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
ஆனால் இரத்தம், பிளாஸ்மா மற்றும் பிளேட்லெட்களின் தேவை தொடர்ந்து உள்ளது என கனடிய இரத்த சேவையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்குப் பின் உள்ளவர்கள் விடுமுறை நாட்களிலும் மருத்துவமனைகளில் தங்கியிருப்பதாகவும், அவர்கள் முழுமையாக தானமாக வழங்கப்படும் இரத்தப் பொருட்களையே நம்பியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விடுமுறைகளுக்கிடையிலான வாரங்கள் எங்களுக்கு மிகவும் சவாலான காலமாக இருக்கின்றன, எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டில் கடுமையான காய்ச்சல் பரவல் மற்றும் எதிர்பார்க்க முடியாத குளிர்கால வானிலை போன்ற கூடுதல் அழுத்தங்களும் எதிர்கொள்ள நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.