கொரோனா காலத்திலும் விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் கனேடியர்கள்!
கனடிய விமான நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 முதல் 2021 ஜனவரி 16ஆம் திகதி வரை கனடாவிற்கும் பிரபலமான விடுமுறை இடங்களுக்கும் இடையில் 1,500க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த எண்ணிக்கையில் இரத்து செய்யப்பட்ட விமானங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் கனடியர்கள் பார்வையிட்ட மிகவும் பிரபலமான இடங்கள் மான்டெகோ விரிகுடா, ஜமைக்கா மற்றும் மெக்சிகோவின் கான்கன் ஆகியவை அடங்குவதாகவும் கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு வசந்த காலத்தில் விமானப் பயணத்தில் வீழ்ச்சி ஏற்பட்டபோது, கனடாவின் விமான நிலையங்களிலிருந்து மெக்சிகோ மற்றும் கரீபியனுக்கான விமானப் போக்குவரத்து இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்போது வெளிப்படையான பயணத் தடை எதுவும் இல்லை எனினும் , கனடாவின் அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அனுமதி இல்லை என கூறியுள்ளது.
ஆனாலும் , அத்தியாவசிய பயணமாக எதைக் குறிக்கிறது என்பதை விளக்க குறிப்பிட்ட விதிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.