ஹோர்முஸ் நெருக்கடியால் எரிபொருள் விலை உயர்வு ; 100 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடும் G7
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்வடைவதைக் கட்டுப்படுத்துவதற்காக, தமது உத்திசார் எண்ணெய் இருப்புக்களிலிருந்து 100 மில்லியன் பீப்பாய் எண்ணெயை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் சந்தைக்கு விடுவிக்க ஜீ-7 (G-7) வல்லரசுகள் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச எரிசக்தி முகவர் அமைப்பின் (IEA) ஊடாக இது ஒருங்கிணைக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், குறிப்பாக டீசல் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக முதல் 20 நாட்களுக்குள் அதிக அளவிலான டீசல் இருப்புக்களை சந்தைக்கு விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐரோப்பிய நாடுகள் தம்மிடம் உள்ள டீசல் இருப்புகளை சந்தைக்கு விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலும் டீசல் கலன் ஒன்றின் விலை 6.37 டொலராக உயர்ந்துள்ளதுடன், வரவிருக்கும் நவம்பர் தேர்தலுக்கு மத்தியில் எரிபொருள் விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கடும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் கடற்போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாகவே இந்த எரிசக்தி நெருக்கடி உருவாகியுள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் நாட்களில் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க G7 நாடுகள் எதிர்பார்க்கின்றன.