சத்திர சிகிச்சை அறையில் கால்பந்து ரசிகர் ஒருவர் செய்த செயல்!
போலந்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சையின்போது, சத்திர சிகிச்சை அறையில் மருத்துவர்கள் தன் உடலில் கத்தியை வைத்து போராடிக் கொண்டிருந்தபோது, ஜம்முனு ஃபிஃபா உலகக்கோப்பையை நபர் ஒருவர் கண்டுகளித்துள்ளார்.
இவருக்கென தனியாக ஒரு டி.வி அந்த சத்திர சிகிச்சை அறையில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்தப் புகைப்படத்தை மகிந்த்ரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா ஷேர் செய்து, `இவரும் ஏதாவதொரு ட்ராஃபிக்கு தகுதியானவர் தானே?’ என்று ஃபிஃபாவை டேக் செய்து குறிப்பிட்டிருக்கிறார்.
Hey @FIFAcom Don’t you think this gentleman deserves some kind of trophy…??? https://t.co/ub2wBzO5QL
— anand mahindra (@anandmahindra) December 8, 2022
இந்தப் புகைப்படம் இப்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் போலந்திலுள்ள கியெல்ஸ் என்ற இடத்திலுள்ள மருத்துவமனையொன்றில் நடந்திருக்கிறது.
அவரது தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கத்தில், அவருடைய பெயர் - அவருக்கு குறிப்பிட்டு என்ன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
சர்வதேச ஊடகம் ஒன்று அளித்திருக்கும் தகவல்களின்படி, இவருக்கு வயிறுக்கு கீழ் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது.
தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களிடம், கத்தாரில் நடக்கும் வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகளுக்கிடையேயான கால்பந்து போட்டியை தான் காண ஆசைப்படுவதாகவும், அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்வதால் சத்திர சிகிச்சை அறையிலேயே தனக்கு டி.வி. வைத்து போட்டியை காண வசதிகள் செய்துதர முடியுமா என்று அவர் கேட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அவரது கோரிக்கையை ஏற்று அவருக்கு ஸ்பைனல் அனஸ்தீஷியா என சொல்லப்படும் முதுகுத்தண்டுவடத்தில் மயக்க ஊசி செலுத்தி அவரை மருத்துவர்கள் சத்திர சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
பின் அங்கு அவருக்கு டிவி வைத்து போட்டியை காண வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்பைனல் அனஸ்தீஷியா போட்டுக்கொள்ளும் நோயாளிக்கு, அவர் விழித்திருக்கும் போது, அவரது இடுப்புக்கு கீழான பகுதியில் உடல் மரத்துவிடும். சுமார் மூன்று மணி நேரம் வரை நீடிக்கும் இந்த மரத்துப்போதல் அந்தரங்க பகுதிகள் அல்லது உடலின் அடிப்பகுதிகளை மரத்துப்போகும் நோக்கத்துக்காக மட்டுமே மருத்துவர்கள் பயன்படுத்துவர்.
போலந்திலுள்ள பல செய்தி நிறுவனங்கள் இவரைப்பற்றிய செய்திகளை பகிர்ந்துள்ளன.
SP ZOZ MSWiA w Kielcach என்ற சம்பந்தப்பட்ட மருத்துவமனை தரப்பில் அவர்களின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில்தான் முதலில் இச்செய்தி பகிரப்பட்டுள்ளது.
ட்விட்டர்வாசிகள் பலரும் “இப்படியொரு சிகிச்சை செய்ததற்காக அந்த மருத்துவர்களை நாம் பாராட்ட வேண்டும். ஏனென்றால் அவர்கள் கண்ணெதிரே கால்பந்து போட்டி நடந்துக்கொண்டிருந்தும் கூட அவர்கள் கவனம் சிதறாமல் பணியாற்றியுள்ளார்” என தெரிவித்து வருகின்றனர்.
`அது சரி, என்னதான் ரசிகரா இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா செய்வீங்க' என்று சிலர் கேட்கின்றனர். இன்னும் ஒருசிலர் `இது முழுக்க முழுக்க அவருடைய விருப்பம்தான்.
அவர் சர்ஜரி நேரத்தில் மன அழுத்தத்துக்கு உள்ளானால் சர்ஜரிக்கு அவர் உடல் ஒத்துழைக்காமல் போகக்கூடும். ஆகவே கூட மருத்துவர்கள் இதற்கு ஒத்துக்கொண்டிருக்கலாம்’ என தெரிவித்து வருகின்றனர்.