கட்டாய ஹொட்டல் தனிமைப்படுத்தலை கனடா முடிவுக்கு கொண்டு வரவேண்டும்... நிபுணர்கள் குழு பரிந்துரை
விமானம் வாயிலாக கனடாவுக்குள் வரும் சுற்றுலாப்பயணிகள் மூன்று நாட்கள் ஹொட்டல்களில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற விதி அமுலில் உள்ளது. அதை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என கொரோனா நிபுணர்கள் ஆலோசனைக் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது.
அந்த ஹொட்டல் தனிமைப்படுத்துதலுக்காக பயணிகள் 2,000 டொலர்கள் வரை செலவிடவேண்டியுள்ளதால், அது அதிக செலவு பிடிக்கக்கூடியது என்றும், சொல்லப்போனால், வெறும் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலால் பலனில்லை என்றும் கூட கூறப்பட்டது.
அத்துடன், விமானத்தில் வருபவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையில், ரயில் முதலான போக்குவரத்தைப் பயன்படுத்துவோருக்கு இந்த தனிமைப்படுத்தல் இல்லை என்றும் சிலர் அபராதம் செலுத்திவிட்டு இந்த தனிமைப்படுத்தலிலிருந்து தப்பிக்கொள்வதாகவும் கூட குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Fed govt expert advisory panel says: “The current requirement for all air travellers to quarantine in government-authorized accommodations should be discontinued.” https://t.co/b3O6fF9py0
— David Akin ?? (@davidakin) May 27, 2021
ஆகவே, கனடாவுக்குள் வரும் அனைவரையும் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்துவதற்கு பதிலாக, தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்யலாம் என அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட பயணிகள், பயணம் புறப்படுவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படவேண்டியதில்லை என்றும், கனடா வந்தபின் ஏழு நாட்களுக்குப்பின் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என முன் கூறப்பட்ட அந்த நிபந்தனைக்கும் உட்படவேண்டியதில்லை என்றும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ஆனால், ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே பெற்றுக்கொண்டவர்கள் தாங்கள் பயணம் புறப்படும் முன் 72 மணி நேரத்திற்குள் ஒரு கொரோனா பரிசோதனையும் , கனடா வந்து 24 மணி நேரத்திற்குள் ஒரு பரிசோதனையும் செய்துகொள்ளவேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
தடுப்பூசியே பெற்றுக்கொள்ளாதவர்களைப் பொருத்தவரை, அவர்களும் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களைப்போலவே, தாங்கள் பயணம் புறப்படும் முன் 72 மணி நேரத்திற்குள் ஒரு கொரோனா பரிசோதனையும் , கனடா வந்து 24 மணி நேரத்திற்குள் ஒரு பரிசோதனையும் செய்துகொள்வதுடன், கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என முடிவு வரும் வரையில், ஏழு நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
தனிமைப்படுத்தலுக்குட்படவேண்டியவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களைப்போலவே, அரசால் நியமிக்கப்பட்ட மையங்களில் தங்கவைக்கப்படவேண்டும் என்றும் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.