உரிமையாளருக்கு பாரிய நஷ்டம் ; எல்லோரையும் அதிரவைத்த லபுபு
உலகையே ஒரு காலத்தில் தன் பக்கம் ஈர்த்த 'லபுபு' (Labubu) பொம்மைகளைத் தயாரிக்கும் பொப் மார்ட் (Pop Mart) நிறுவனத்தின் உரிமையாளர் வாங் நிங்கின் (Wang Ning), சொத்து மதிப்பு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
38 வயதான வாங் நிங், முன்னதாக அலிபாபா நிறுவனர் ஜாக்-மாவை விட அதிக செல்வந்தராகத் திகழ்ந்தார்.
ஆனால் தற்போது லபுபு மோகம் குறைந்து வருவதால், அவரது சொத்து மதிப்பு 27.5 பில்லியன் டொலரிலிருந்து 16.2 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.

இது சுமார் 11.3 பில்லியன் டொலர் இழப்பாகும். ஹொங்கொங் பங்குச் சந்தையில் பொப் மார்ட் நிறுவனத்தின் பங்குகள் 40% வரை சரிவடைந்துள்ளன.
முன்னதாக 339.80 ஹொங்கொங் டொலராக இருந்த ஒரு பங்கின் விலை, தற்போது 200 ஹொங்கொங் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. சமீபத்தில் வெளியான 'லபுபு 4.0' பொம்மைகளின் விலை 30% சரிந்துள்ளது.
அதன் உத்தியோகபூர்வ விலை 79 யுவான் என்றாலும், அதன் மறுவிற்பனை மதிப்பு 115 யுவானாகக் குறைந்துள்ளது.
ரிஹானா, கிம் கர்தாஷியன் மற்றும் பிளாக்பிங்க் குழுவின் லிசா (Lisa) போன்ற உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் இந்தப் பொம்மைகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டியமையே இது உலகம் முழுவதும் வைரலாகக் காரணமாக அமைந்தது.
வருமானம் மற்றும் லாபம் அதிகரித்திருந்தாலும், 2026 ஆம் ஆண்டளவில் இதன் வளர்ச்சி வேகம் குறையக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால் பொப் மார்ட் நிறுவனம் வெறும் பொம்மை விற்பனையுடன் நின்றுவிடாமல், டிஸ்னி (Disney) போன்ற ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு சாம்ராஜ்யமாக உருவெடுக்கத் திட்டமிட்டு வருகின்றது.