மன நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை
இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் தெரிவிக்கிறது.
மன நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் போதான சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவதைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கை சாடியுள்ளது.
மன நோயாளிகளின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவர்களின் நல்வாழ்வு தொடர்பு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன் இடைக்கால அறிக்கை மற்றும் வழிகாட்டல்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான கடந்த டிசம்பர் 10ஆம் திகதி வெளியானது. அந்த இடைக்கால அறிக்கையில் மனநலம் தொடர்பில் நாட்டில் புதிய சட்டமொன்று இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய மனநல நிறுவனத்தில் ஊழியர்களின் தவறான நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகம் தொடர்பில், அந்த ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முக்கிய முறைப்பாடுகளை அடுத்தே அவர்களின் இந்த கவலையும் அறிக்கையும் வெளியாகியுள்ளது. அவர்களது கண்டுபிடிப்பில் சில விடயங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில், நோயாளிகளை இழிவுபடுத்தும் வகையில் இருந்துள்ளது.
கண்காணிப்பு கமராக்கள் இல்லாத இடங்களில் ஊழியர்கள் நோயாளிகளை அடிப்பது போன்ற முறைப்பாடுகள் அந்த ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதுமாத்திரமின்றி, ஊழியர் ஒருவரின் நடவடிக்கை காரணமாக நோயாளி ஒருவர் உயிரிழந்ததும் அவர்களது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மன நோயாளிகளின் நலன் மற்றும் சுதந்திரம் குறித்து முன்னெடுத்த உண்மையை கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த அறிக்கை வந்துள்ளது.
இதையடுத்து, அந்த ஆணைக்குழு சுகாதார அமைச்சு, தேசிய மனநல நிறுவனம், இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் ஆகியவற்றுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விடுத்துள்ளது.
அதன்படி, சர்வதேச மருத்துவ தரம் மற்றும் அரசின் மனித உரிமைக் கடப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், மனநலச் சட்டம் ஒன்று இயற்றப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது வழிகாட்டு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக பரிந்துரை செய்துள்ளது.
11 பக்கங்கள் கொண்ட விரிவான இந்த ஆவணம் அந்த ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இது பொது வெளியிலும் வெளியானது. 'குறிப்பிடத்தக்க கவலைகள்' என அந்த ஆணைக்குழு கூறுவது தொடர்பில், மன நல நோயாளிகளின் புனர்வாழ்வு காலத்தில் அரசு அவர்களின் நல்வாழ்வு பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அவர்கள் விடுத்துள்ள வழிகாட்டல்களின் ஒரு பகுதியாக அந்த வைத்தியசாலையில் பொலிஸ் காவல் மையம் ஒன்றையும், மனநோய் உள்ள சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறைக்காவலர்கள் அங்கொட வைத்தியசாலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.