ஒன்டாரியோவில் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி பாதிப்பு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த உறைமழையால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் மின்சாரத்துண்டிப்பு நீடிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 396,000 வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை வரை மின் விநியோகம் திரும்ப வாய்ப்பு இல்லை
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி 396,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என ஒன்டாரியோ மாகாண மின் வழங்கல் நிறுவனம் ஹைட்ரோ வன் Hydro One தெரிவித்துள்ளது.
சில ஜோர்ஜியன் பே (Georgian Bay) பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை மின் விநியோகம் திரும்ப வாய்ப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் தொடங்கிய புயலின் பின் 637,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை சீர் செய்யும் முனைப்புக்களில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பனிப்புயல் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்த காரணத்தினால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.