யாரைக்கண்டும் எனக்கு அச்சமில்லை; உக்ரைன் அதிபர் தெரிவிப்பு
உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வரும் நிலையில், அந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இதற்கிடையில், போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zhelensky) போரை நிறுத்தும்படி உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.
அதேசமயம் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக ரஷிய தரப்பில் பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zhelensky) நேற்று புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் தலைநகர் கீவ்-வில் உள்ள பென்கோவா பகுதியில் தான் இருக்கிறேன்.
யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை. புதினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ அவ்வளவு நாள் நான் தலைநகர் கீவ்வில் தான் இருக்கப்போகிறேன்’ என கூறியுள்ளார்.