அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு ஐ.பி.எம். விடுத்த அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பணி விசா மற்றும் நிரந்தர வதிவிட அனுமதியான கிரீன் கார்டு (Green Card) பெறுவதற்கான அனுசரணையைப் பெரும்பாலான பதவிகளுக்கு நிறுத்துவதற்கு சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம். (IBM) தீர்மானித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு ஊழியர்களுக்கான குடிவரவு மற்றும் விசா நடைமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வரும் சூழலில், ஐ.பி.எம். இந்த முடிவை எடுத்துள்ளது.
ஐ.பி.எம். நிறுவனத்தின் 150,000 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட மிகப்பெரிய பிரிவான ஐ.பி.எம். கன்சல்டிங் (IBM Consulting) துறையிலேயே இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, குறித்த பிரிவில் உள்ள பெரும்பாலான பதவிகளுக்கு அமெரிக்காவின் H-1B பணி விசா மற்றும் கிரீன் கார்டு அனுசரணை வழங்குவதை நிறுவனம் நிறுத்தவுள்ளது.
நிறுவனத்தின் இந்தத் தீர்மானத்தால் பாதிக்கப்படும் ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள ஐ.பி.எம். நிறுவனத்தின் கிளைகளில் பணியாற்றுவதற்காக இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தமது தீர்மானத்தை அறிவிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு இடமாற்றத்தை ஏற்காதவர்களுக்கு மூன்று மாத சம்பளத்துக்கு இணையான இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும், அவர்களுக்கான இறுதிப் பணிநாளாக 2026 டிசம்பர் 31 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஐ.பி.எம். நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவிக்கையில், திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்காவின் உயர்திறன் விசா திட்டங்களில் நிறுவனம் பங்கேற்று வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடந்த பல ஆண்டுகளாக இத்தகைய விசா திட்டங்களில் நிறுவனத்தின் பங்கேற்பு குறைந்து வருவதாகவும், திறமையான பணியாளர்களின் கிடைப்புத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்திற்கொண்டு பெரும்பாலான பதவிகளுக்கான விசா மற்றும் கிரீன் கார்டு அனுசரணையை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் ஐ.பி.எம். நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தாது என்பதுடன், அதன் கன்சல்டிங் பிரிவில் உள்ள பெரும்பாலான பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டு நிபுணர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீதான கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
H-1B விசா திட்டத்தின் ஊடாக அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புத் திறன்கள் தேவைப்படும் துறைகளில் வெளிநாட்டு நிபுணர்களைப் பணிக்கு அமர்த்துகின்றன.
இந்த நிலையில், வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா நடைமுறைகளில் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் மாற்றங்கள், குறிப்பாக இந்தியத் தொழில்நுட்பத் துறையினரிடையே நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியர்கள் H-1B விசா திட்டத்தின் முக்கிய பயனாளர்களாக உள்ள நிலையில், ஐ.பி.எம். நிறுவனத்தின் புதிய தீர்மானம் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம் தொடர்பில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.