கனடாவில் ஆள்மாறாட்டம் வழக்கு தீர்ப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
கனடாவின் ஒட்டாவா நகரைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றொருவரின் அடையாளத்தைத் திருடி சுமார் 5 லட்சம் டாலர் மதிப்புள்ள ஆடம்பர டிரக்குகள் மற்றும் எஸ்.யூ.வி கார்களை வாங்கிய வழக்கில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோவின் பாரி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஸ்குவாலே ஃபொன்ஸோ என்ற இந்த நபர், ஹாமில்டன் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளித் துணை முதல்வரின் அடையாளத்தைப் பயன்படுத்தி இந்த பிரம்மாண்ட மோசடியைச் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், அலிஸ்டன் நகரில் உள்ள 'எர்னி டீன் செவ்ரோலெட்' வாகன விற்பனையகத்தில், போன் மூலம் காப்பீடு மற்றும் ஓட்டுநர் உரிம ஆவணங்களை வழங்கி, ஒரு விலையுயர்ந்த டிரக்கை வாங்க ஃபொன்ஸோ முயன்றார்.
சந்தேகமடைந்த ஊழியர்கள், ஆவணங்களில் இருந்த உண்மையான நபரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, மூன்று நாட்களுக்குப் பிறகு வாகனத்தை எடுக்க வந்த ஃபொன்ஸோவை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், இதற்கு முன்பாக இருமுறை ஃபொன்ஸோ இதே பாணியில் வெற்றி பெற்றது தெரியவந்தது: வாட்ஃபோர்ட் பகுதியில் இருந்து 171,000 டொலர் மதிப்புள்ள 'ஃபோர்டு F-150 ரேப்டர்' (Ford F-150 Raptor) டிரக்கை திருடினார்.
இது பின்னர் மாண்ட்ரியல் துறைமுகத்தில் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கப்பல் கன்டெய்னருக்குள் கண்டறியப்பட்டது. நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இருந்து திருடப்பட்ட 180,000 டொலர் மதிப்புள்ள 'காடிலாக் எஸ்கலேட்' கார் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த வழக்கில் அரசுத் தரப்பும் பிரதிவாதி தரப்பும் இணைந்து சமர்ப்பித்த கூட்டு மனுவின்படி, ஃபொன்ஸோ ஏற்கனவே சிறையில் கழித்த 6 மாத காலமே தண்டனையாகக் கருதப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார்.
மேலும் அவருக்கு ஒட்டாவா செல்வதற்கான ஒருவழி பேருந்து டிக்கெட்டும் வழங்கப்பட்டது. இவ்வளவு பெரிய கார் கடத்தல் மற்றும் மோசடி கும்பல் பின்னணி உள்ள ஒரு வழக்கில், ஃபொன்ஸோவிற்கு மிகக் குறைந்த தண்டனை வழங்கப்பட்டு விடுவிக்கப்படுவதைக் கண்டு நீதிபதி ரேமண்ட் வில்லியம்ஸ் கடும் அதிருப்தி அடைந்தார்.
"இந்த குற்றத்திற்கு 6 மாதங்களை விட மிக அதிகமான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். சிம்கோ கவுண்டியில் (Simcoe County) ஃபொன்ஸோ இனி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது," என்று கூறி, அவருக்கு 18 மாதங்கள் நன்னடத்தை கண்காணிப்பு விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, ஃபொன்ஸோவிற்கு மனநலப் பிரச்சினைகள் மற்றும் சிறுவயது முதல் குடிப்பழக்கம் இருந்ததாக அவரது வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது, ஆனால் அதற்கான மருத்துவ ஆவணங்கள் எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.