கனடாவில் சாஸ்கடூன் பொலிஸாரின் எச்சரிக்கை
கனடாவின் சாஸ்கடூன் நகரில் வசிக்கும் மக்களுக்கு, போக்குவரத்து விதிமீறல் அபராதம் கட்டக் கோரி வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து காவல்துறை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு பொலிஸ் அதிகாரி அனுப்புவது போல வரும் இந்தக் குறுஞ்செய்தியில், உங்களுக்கு மாகாண நீதிமன்ற போக்குவரத்து விதிமீறல் உள்ளதாகவும், நீங்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் கூறப்பட்டிருக்கும்.
மேலும், அபராதத்தை உடனே செலுத்த ஒரு இணையதள லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. சாஸ்கடூன் காவல்துறை ஒருபோதும் அபராதம் செலுத்தக் கோரி பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பாது.

எனவே இந்த செய்திகள் முற்றிலும் போலியானவை என அறிவுறுத்தியுள்ளது. இந்த குறுஞ்செய்திகளில் வரும் எந்தவொரு லிங்க்கையும் (Link) கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அந்த எண்களை உடனே பிளாக் (Block) செய்து, செய்திகளைப் புறக்கணிக்கவும் எனவும், லிங்க் வழியாக எந்தவொரு பணப் பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடியால் ஏதேனும் பண இழப்பு அல்லது பாதிப்பு ஏற்பட்டிருந்தால், உடனடியாக சாஸ்கடூன் காவல்துறையை 306-975-8300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், இது போன்ற மோசடி குறுஞ்செய்திகளை கனடிய விழிப்புணர்வு மையத்திலும் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.