ஹமாஸின் மூத்த தலைவர்கள் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
ஹமாஸுக்கு எதிராக நேற்று (03) நடத்திய தாக்குதல்களில், மூன்று மூத்த ஹமாஸ் தலைவர்களைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அரசாங்கத்தின் தலைவர் ரவ்ஹி முஸ்தாஹா, ஹமாஸின் அரசியல் பணியகத்தின் பாதுகாப்பு அதிகாரி சமே அல்-சிராஜ் மற்றும் தளபதி சமி ஓதே ஆகியோர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
முஸ்தாஹா, ஹமாஸின் மூத்த செயற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்டு வந்தார். அத்துடன் ஹமாஸின் படைகளின் முடிவுகளில் நேரடி பங்கை அவர் வகித்தார் என்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
ஹமாஸின் உயர்மட்ட தலைவர் யாஹ்யா சின்வாருக்கு, முஸ்தாஹா வலது கையாக செயற்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், 2015ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை முஸ்தாஹாவை, உலகளாவிய பயங்கரவாதி என்று பிரகடனப்படுத்தியது.
அதேவேளை, உயிரிழந்தவர்களில் மற்றுமொருவரான சிராஜ் ஒரு அரசியல் பீட உறுப்பினர் என்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.