மத்திய கிழக்கு போர் தொடர்பில் ஐநா விடுத்துள்ள எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட்டாலும் கூட, உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவிப் பொருட்களுக்கான விநியோகச் சங்கிலி சீரடைவதற்கு 2027-ஆம் ஆண்டு வரை ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த பிராந்திய மோதல் வெடித்தது.
போர் தொடங்கி தற்போது கிட்டத்தட்ட 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், இதன் பாதிப்புகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தைத் தாண்டி உலகளவில் எதிரொலிப்பதாக ஐநா சிறுவர் நிதியத்தின் (UNICEF) உலகளாவிய போக்குவரத்து மற்றும் தளவாடப் பிரிவுத் தலைவர் ஜான்-செட்ரிக் மீயஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய மனிதாபிமான விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறு, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளைப் பாதித்துள்ளது.
உலகளாவிய விநியோகப் பாதைகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலும், கூடுதல் செலவுகளும் ஏற்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதிகளுக்கான போக்குவரத்துப் பாதைகளில் ஏற்படும் தடங்கல்கள், நேரடியாகப் பெரும் மனிதாபிமான நெருக்கடியாக உருவெடுக்கின்றன என்று மீயஸ் சுட்டிக்காட்டினார்.
விநியோகத்தில் ஏற்படும் தொடர் தாமதங்கள் மற்றும் மிக அதிக செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக, நிதி நெருக்கடியில் உள்ள யுனிசெஃப் போன்ற அமைப்புகள் தங்களுக்குள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
தற்போது ஒரு உடன்பாடு எட்டப்பட்டு, ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்பட்டாலும் கூட, யுனிசெஃப் நிறுவனத்தின் விநியோகப் பாதைகள் சீரடைய இந்த ஆண்டின் இறுதி வரை (2026 இறுதி) போதாது, 2027-க்கு முன்பாக நிலைமை சீராக வாய்ப்பில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.