கனடா விற்பனைக்கு அல்ல – டக் ஃபோர்ட்
கனடாவின் இறையாண்மை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த புதிய விமர்சனத்திற்கு, ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இதை நான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும் என்று என்னால் நம்பவே முடியவில்லை, ஆனால் கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாறாது. கனடா விற்பனைக்கு அல்ல" என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் (X) தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

கனடா நாடு தற்போது ஒரு 'தொழில்நுட்பப் பொருளாதார பின்னடைவை' சந்தித்து வருவதாக வெளியிடப்பட்ட செய்திக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமூக ஊடகத்தில் "51-வது மாகாணம்!" என்று கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.
டிரம்பின் இந்த பதிவை கனடாவுக்கான அமெரிக்க தூதர் பீட் ஹோக்ஸ்ட்ராவும் பகிர்ந்துள்ளார். கடந்த 2024 டிசம்பர் முதல் டிரம்ப் கனடாவை 51-வது மாகாணம் என்று தொடர்ந்து அழைத்து வருகிறார்.
ஆரம்பத்தில் இது ஒரு நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டாலும், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் இது ஒரு உண்மையான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் குறித்தும், இரு நாடுகளின் எல்லை வெறும் ஒரு "செயற்கைக் கோடு" தான் என்றும் டிரம்ப் சமீபகாலமாகக் கூறி வருகிறார்.
ஜனாதிபதி டிரம்பின் இந்த புதிய சீண்டல் குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி இதுவரை பகிரங்கமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
எனினும், கடந்த வாரம் நியூயார்க்கில் நடந்த வணிகக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "ஒரு வலுவான கனடா, அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற (Make America Great Again) உதவும்" என்று டிரம்பின் பிரபலமான பிரச்சார முழக்கத்தைக் குறிப்பிட்டே பேசியிருந்தார்.
கனடாவின் பொருளாதாரத்தில் மந்தநிலை இருப்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் கார்னி, ஆனால் தற்போதைய நிலையை 'பொருளாதார வீழ்ச்சி' என்று கூற மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஒன்டாரியோ மாகாணம் கடந்த ஏப்ரல் மாதத்தில், பணவீக்கத்தை சரிசெய்த பிறகும் 680 சதவீதம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று முதல்வர் டக் ஃபோர்டு சுட்டிக்காட்டியுள்ளார்.