இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல்: மூத்த தலைவர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி நிலவி வரும் நிலையில், பிரதமர் இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அந்நாட்டு மூத்த தலைவர் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஆளும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதில் ஆளும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தோல்வியடைந்த நிலையிலேயே அந்த கட்சியின் மூத்த தலைவர் ஃபைசல் வாவ்டா குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, பிரதமர் இம்ரான் கான் பொதுக்கூட்டங்களில் பேசும்போது தலைவரைக் கொல்லத் திட்டம் தீட்டப்படுவதாகவும், அதனாலையே குண்டு துளைக்காத அங்கியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக பைசல் வாவ்டா கூறினார்,
ஆனால், சூழ்ச்சிகளால் அல்ல, எல்லாம் வல்ல அல்லாஹ் நிர்ணயித்த நேரத்தில் தான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுவேன் என்று பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
ஃபைசல் வால்டா தெரிவிக்கையில், பிரதமர் இம்ரான் கான் தைரியமானவர், நாட்டை யாருக்கும் விட்டுக்கொடுக்க விடமாட்டார் என்றார். எந்த ஒரு நாட்டின் போர் விவகாரத்திலும் பாகிஸ்தான் பங்கேற்காது எனவும், அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்த எந்த நாட்டையும் அனுமதிக்காது என்பது தான் பிரதமர் இம்ரான் கானின் கொள்கை என்றார்.
இம்ரான் கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த முத்தாஹிதா குவாமி முவ்மென்ட்-பாகிஸ்தான் (எம்க்யூஎம்-பி) கட்சியின் 2 அமைச்சர்கள் நேற்று பதவி விலகினர். எம்க்யூஎம்-பி கட்சி எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.