இஸ்ரேல் விமான சேவைகளை ரத்து செய்த Air Canada உட்பட பல நிறுவனங்கள்
இஸ்ரேல் நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்து செய்யத் தொடங்கியுள்ளன. ஈரானில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் கொல்லப்பட்ட நிலையில், பழி தீர்ப்பது உறுதி என்றே ஈரான் சூளுரைத்துள்ளது.
மட்டுமின்றி, ஜூலை 13ம் திகதி ஹமாஸ் படைகளின் ராணுவப் பிரிவு தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான விமானங்கள் ரத்து
இந்த நெருக்கடியான சூழலில், விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்ய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Delta மற்றும் United விமான சேவை நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலுக்கான சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவு முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக United அறிவித்துள்ளது.
Delta விமான சேவை நிறுவனம் தெரிவிக்கையில், தங்களின் இணைய பக்கமூடாக Air France மற்றும் EL AL Israel ஆகிய விமானங்களில் இஸ்ரேலுக்கு முன்பதிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஒகஸ்ட் 14க்கு முன் டெல்டா நிறுவனத்தில் டெல் அவிவ் அல்லது அங்கிருந்து பயணத்தை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனிடையே, Air Canada நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15ம் திகதி வரையில் இஸ்ரேலுக்கான தங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ரொறன்ரோவில் இருந்து ஒக்டோபர் 15ம் திகதி இஸ்ரேலுக்கு அடுத்த விமானம் புறப்பட உள்ளது. 2023 ஒக்டோபர் 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை அடுத்து பல விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு விமான சேவையை ரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.