அமெரிக்காவில் அதிகரித்துள்ள யூதர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த (07.10.2023) ஆரம்பமாகி இருதரப்பினரிடையே தொடர்ச்சியான தாக்குதல் இடம்பெற்றுவருகின்றது.
அமெரிக்கா ,இங்கிலாந்து ,கனடா ,மற்றும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு தமது ஆதரவினை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா ,இங்கிலாந்து ,கனடா மற்றும் மேற்கைத்தேய நாடுகளில் ஹமாஸ் ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நியூயார்க் நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த யூத மாணவர்களை கடந்த (25.10.2023) அன்றைய தினம் பாலஸ்தீன ஆதரவு கும்பல், யூதர்களுக்கு எதிராக கோஷமிட்டு தாக்க வந்தமையினால் அங்குள்ள நூல் நிலையத்தினுள் தங்கும் நிலை ஏற்பட்டது.
ரஷியாவில் உள்ள டஜெஸ்டான் விமான நிலையத்திற்குள் கடந்த (30.10.2023) திடீரென புகுந்த ஹமாஸ் ஆதரவு கும்பல் ஒன்று, இஸ்ரேலில் இருந்து வந்திறங்கிய ஒரு விமானத்தில் யூதர்கள் எவரேனும் உள்ளனரா என அனைத்து பயணிகளின் கடவுச்சீட்டுகளை வைத்து தேடிய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்ற ஒரு ஹமாஸ் ஆதரவு பேரணியில் கலந்து கொண்ட பாலஸ்தீன ஆதரவாளர்களில் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 69 வயதான யூதர் ஒருவரை மெகாபோனால் (megaphone) தலையில் தாக்கியதால் பலத்த காயமடைந்த அந்த யூதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது போன்ற அச்சுறுத்தல்களும், வன்முறை சம்பவங்களும் புகழ் பெற்ற கொலம்பியா மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களிலும் நடைபெற்றதால் அமெரிக்கா,கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் யூதர்கள் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருவதாக கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அதிகளவில் பாதிக்கப்படும் யூதர்கள்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பமானதிலிருந்து அமெரிக்காவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் நிகழ்ச்சிகள் முன்பை விட 400 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் யூதர்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் 1040-ஐ கடந்து விட்டன.
இங்கிலாந்தில் 324 சதவீதம் தாக்குதல் நிகழ்ச்சிகள் முன்பை விட அதிகரித்துள்ளன. அந்நாட்டின் தலைநகர் லண்டனில் யூத பள்ளிகளும், யூத மத வழிபாட்டு தலங்களும் தற்காலிகமாக மூடப்படும் நிலையே ஏற்பட்டது.
ஜெர்மனியில் யூத பிரார்த்தனை கூடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
ஸ்பெயின் நாட்டில் யூத மத வழிபாட்டு தலங்களின் சுவர்களில் யூதர்களுக்கு எதிரான வாசகங்களும், படங்களும் தீற்றப்பட்டன.
உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் இது போன்ற சம்பவங்களால் அச்சத்தில் வாழ்கிறார்கள். "நாங்கள் இனி எங்கு செல்வது? யாரிடம் போய் சொல்வது?" என தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர்.