கேரளா நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்வு
இந்தியா வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 340 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, அட்டமலை, சூரல்மலை, குன்ஹோம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த 30ஆம் திகதி அதிகாலை பெரும்பாலான மக்கள் உறக்கத்திலிருந்தபோது பாரிய மண்சரிவு ஏற்பட்டது.
340இற்கும் அதிகமானோர் இந்த மண்சரிவில் சிக்கிப் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில், தொடர்ந்தும் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 250 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 3,000இற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதுடன், குறித்த பகுதிகளில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.