இந்திய வான்வெளி மூடல் ; பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பு
பாகிஸ்தான், இந்தியாவுடனான மோதல் போக்கு காரணமாக, ஏப்ரல் 24ஆம் திகதி ஜூன் 30ஆம் திகதி வரை இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியதால், சுமார் 127 கோடி ரூபாய் (4.1 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய்) இழப்பை சந்தித்துள்ளது.
இந்தத் தகவல் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 22ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா 1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது.
இதற்கு எதிர்ப்பாக, பாகிஸ்தான் ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியது, இதனால் ஒவ்வொரு நாளும் 100-150 இந்திய விமானங்கள் பாதிக்கப்பட்டன.
இதன் விளைவாக, பாகிஸ்தானின் வான்வழி போக்குவரத்து 20% குறைந்து, ‘ஓவர் ஃபிளை’ கட்டண வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டது.
இருப்பினும், பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019இல் 5,08,000 அமெரிக்க டொலர்களாக இருந்தது, 2025இல் 7,60,000 டொலர்களாக உயர்ந்துள்ளது.
“பொருளாதார இழப்புகள் ஏற்பட்டாலும், தேசிய இறையாண்மையும் பாதுகாப்பும் முதன்மையானவை,” என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியுள்ளது, இந்த தடை ஓகஸ்ட் 23ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானும் தனது வான்வெளி மூடலை ஓகஸ்ட் இறுதி வாரம் வரை நீட்டித்துள்ளது.