டெக்சாஸ் பல்கலைக்கு 20 மில்லியன் நன்கொடை வழங்கிய இந்திய தம்பதி!
அமெரிக்கா வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் தம்பதியினர் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
பிராட்காம் நிறுவனத்தின் துணைத் தலைவரான விகாஸ் சின்ஹா மற்றும் அனுராதா சின்ஹா தம்பதியினரின் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிதியுதவியை கொண்டு, அங்கு புதிய செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரி நிறுவப்படவுள்ளது.

மாணவர் கல்வி உதவித்தொகை, பேராசிரியர் பதவிகள் ,ஆராய்ச்சிப் பணி
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும் இந்த கல்லூரிக்கு 'அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு கல்லூரி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹாரிசன் கெல்லர் இவர்களின் உன்னத சேவையை பாராட்டியுள்ளார். தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் இக்கொடை புதிய பாதையை அமைக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும், இப்புதிய கல்லூரியானது செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, சுகாதார இன்ஃபர்மேடிக்ஸ் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுத் துறைகளை இணைக்கும் ஒரு முக்கிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்படும்.
இந்த நிதியானது மாணவர் கல்வி உதவித்தொகை, பேராசிரியர் பதவிகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கல்வியே தங்களுக்கு பல கதவுகளை திறந்ததாகவும், மற்றவர்களுக்காக அந்த கதவுகளை திறந்து வைப்பதே தங்கள் நோக்கம் என்றும் விகாஸ் சின்ஹா பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்