கனடாவுக்குள் நுழைய முயன்ற ஒரு இந்தியக் குடும்பம் அமரிக்காவில் சிறையிலடைப்பு
கனடாவுக்குள் நுழைய முயன்ற ஒரு இந்தியக் குடும்பம் கனடா எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (CBSA) திருப்பி அனுப்பப்பட்டதால், அவர்கள் அமெரிக்காவில் பல வாரங்களாகச் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குடும்பத்தின் வழக்கறிஞர் இந்தச் சம்பவத்துக்குக் கனடா எல்லைப் பாதுகாப்புப் படையின் (CBSA) கெடுபிடியே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பல வாரங்கள் சிறை
அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது இரு குழந்தைகள் அடங்கிய அந்தக் குடும்பம், கனடாவுக்குள் நுழைய முயன்றது.
விதிவிலக்கின் கீழ் தகுதி: அந்தக் குடும்பம், கனடாவில் நுழையத் தகுதி உள்ள ஒரு குறிப்பிட்ட விதிவிலக்கு பிரிவின் (Exception) கீழ் விண்ணப்பித்திருந்தது. இந்த விதிவிலக்கின் கீழ் அவர்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், கனடா எல்லைப் பாதுகாப்புப் படையினர் (CBSA), அவர்களின் விண்ணப்பத்தில் இருந்த மிகச் சிறிய முரண்பாடுகளை (Small Discrepancies) மட்டுமே பெரிதுபடுத்தி, குடும்பத்தை கனடாவுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
கனடாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதால், அவர்கள் மீண்டும் அமெரிக்க எல்லைக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால், அமெரிக்க எல்லை அதிகாரிகள் அந்தக் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களையும் கைது செய்து, பல வாரங்கள் சிறையில் அடைத்தனர்.
சம்பவம் தொடர்பில் இந்திய குடும்பத்தின் வழக்கறிஞர் கூறுகையில், , “கனடா எல்லைப் பாதுகாப்புப் படையினர், நுழையத் தகுதி பெற்றிருந்த ஒரு குடும்பத்தை, சின்ன சின்னக் குறைபாடுகளைக் காரணம் காட்டி நிராகரித்தது மனிதாபிமற்ற செயல்.
ஒரு குடும்பம் அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டதற்கு CBSA இன் இந்த தேவையற்ற கெடுபிடியே முதன்மைக் காரணமாகும்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தச் சம்பவம், கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான எல்லைக் கடக்கும் விதிமுறைகளின் சிக்கலையும், எல்லை அதிகாரிகளின் முடிவுகள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.