வெளிநாடொன்றில் கைதான இந்திய வம்சாவளி இளைஞன் ; அதிர்ச்சி காரணம் வெளியானது
சிங்கப்பூரில் சர்ச்சுக்கு மிரட்டல் விடுத்த இந்திய வம்சாவளி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அப்பர் புக்கிட் திமா பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் சர்ச்சில் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், திடீரென பயங்கரவாத தாக்குதல் நடத்த இருப்பதாக வந்த தகவலையடுத்து, அனைத்து வழிபாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து, சர்ச்சின் ஒரு பகுதியில் வயர்களுடன் கூடிய கருப்பு, மஞ்சள் நிற டேப்பால் சுற்றப்பட்ட, வெடிகுண்டு என்று நம்ப வைக்கும் விதமான பொருள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில், சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோகுலானந்தன் மோகன்,26, என்பவர் கைது செய்யப்பட்டார். வெடிகுண்டு போன்ற ஒருபொருளை தயாரித்து கைது செய்யப்பட்ட நபர் நாடகமாடியதாகவும், பயங்கவராத தாக்குதல் சம்பவம் எல்லாம் கிடையாது என்று பொலிஸார் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து, அவரது மனநல நிலையை அறிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். கோகுலானந்தன் மோகன் குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்க வாய்ப்புள்ளது.