கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞன்
கனடாவில் இந்திய வம்சாவளி சேர்ந்த சீக்கிய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 24 வயது இளைஞர் சன்ராஜ் சிங். சீக்கியரான இவர் சம்பவத்தன்று எட்மன்டன் நகரில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சன்ராஜ் வாகனத்தை மறித்து, அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பொலிஸுக்கு தகவல் அளித்தனர்.
தகவலறித்து பொலிஸார் அங்கு விரைந்து சென்றபோது, சன்ராஜ் தனது வாகனத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து பொலிஸார் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு சன்ராஜுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சன்ராஜ் உயிரிழந்துவிட்டார். அவரது கொலைக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில், தப்பியோடிய கொலையாளியை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கடந்த 3-ம் திகதி கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் 21 வயதான பவன்பிரீத் கவுர் என்கிற சீக்கிய பெண் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டதும், கடந்த மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மெஹக்ப்ரீத் சேத்தி என்கிற 18 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டதும் நினைவு கூரத்தக்கது.