ரஷ்ய அதிபர் மற்றும் உக்ரைன் அதிபருடன் பேசிய இந்திய பிரதமர் மோடி!
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் உக்கிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நிலை குலைந்து வரும் நிலையில், இன்று இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் மற்றும் உக்ரைன் அதிபருடன் உரயாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை செயல்படுத்தி மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மீட்பு பணி, போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் அவ்வப்போது ரஷியா அதிபர் மற்றும் உக்ரைன் அதிபருடன் பேசி வருகிறார்.
அந்த வகையில், இன்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த பேச்சின்போது, வடகிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான சுமி நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உதவி செய்யுமாறு உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்தார்.
இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசியதாகவும், இரு தலைவர்களுடனான இந்த உரையாடல் சுமார் 50 நிமிடம் வரை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும் இதன்போது உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான பேச்சுவர்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ரஷிய அதிபர் புதின் எடுத்துரைத்ததாகவும் இந்திய தகவல்கள் கூறுகின்றன.