அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்!
அமெரிக்காவில் அண்மைக்காலமாக இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் நேற்றையதினம் (05-02-2024) இந்திய மாணவர் ஒருவர் சிகாகோவில் தாக்குதலை எதிர்கொண்டுள்ளார்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாதிக்கப்பட்ட சையத் மசாஹிர் அலி மற்றும் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஐதராபாத்தை சேர்ந்த அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இந்த சம்பவத்தை விவரிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளி காட்சிகளில், இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி, தாக்கப்படுவதும், அதிக அளவில் ரத்தம் கொட்டியதையும் அதில் காண முடிந்தது.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றொரு காணொளி, சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளாகத் தோன்றுகிறது, சிகாகோ தெருக்களில் அலி மூன்று தாக்குதல்காரர்களால் துரத்தப்படுவதைக் காட்டுகிறது.
கொடூரமாக இந்திய மாணவர் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த வாரம், அமெரிக்காவில் ஸ்ரேயாஸ் ரெட்டி என்ற இந்திய மாணவர் ஓகியோவின் சின்சினாட்டி நகரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.