அபார வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி!
2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதலாவது அணியாக இந்திய அணி தெரிவாகியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் 70 ஓட்டங்களால் வெற்றி பெற்றதற்கு அமைய இவ்வாறு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றள்ளது இந்திய அணி.
வங்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி 117 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ஓட்டங்களையும், சுப்மன் கில் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.
சாதனை படைத்த விராட் கோலி
அதனை தொடர்ந்து இன்று சச்சினின் அதிக முறை ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இதுவரை ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை பெற்றிருந்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
இதற்கமைய, 398 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் டேரில் மிட்செல் அதிகபட்சமாக 134 ஓட்டங்களை பெற்றதுடன் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி இந்திய அணி இந்த ஆண்டுக்கான உலக கிண்ண தொடரில் முதலாவது அணியாக இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
அதேநேரம் நாளைய தினம் தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இடம்பெறவுள்ளது.