அமெரிக்காவில் இந்திய இளைஞர் உயிரிழப்பு; காரில் அடித்து செல்லப்பட்ட சோகம்
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில், இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் வசித்து வந்த 33, வயதைக் கொண்ட இந்திய ஐ.டி. ஊழியர் வெங்கடேஷ் தொப்பலபுடி ஹூஸ்டனிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது கன்சாஸ் மாகாணத்தின் வெல்லிங்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிபோதே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்திய தூதரகம் ஆழ்ந்த கவலை
அத்துடன், இச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தபோதும்,மீட்புப் படையினரால் உடனடியாக தண்ணீரில் இறங்கி மீட்க முடியவில்லை.
இதனிடையே, ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் கெமராக்கள் உதவியுடன் தீவிர தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டுள்ள நிலையில் வெங்கடேஷ் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரகம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்த வெங்கடேஷின் உடலை முறைப்படி இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ உதவிகளையும் செய்து வருவதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.