கனடிய தொழில் அமைச்சர் ஆசியாவிற்கு விஜயம்
கனடாவின் தொழில் அமைச்சர் மெலனி ஜோலி, ஐந்து நாள் ஆசியப் விஜயத்தை தொடங்கியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் ஈர்ப்பதற்கான முயற்சியின் பகுதியாக இந்த விஜயம் அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது, கனடாவின் அமெரிக்கா அல்லாத ஏற்றுமதிகளை விரைவாக அதிகரிக்கும் திட்டத்திற்கான முக்கிய நிறுவனங்களுடன் சந்திப்புகள் நடைபெறவுள்ளது.

இதில், கனடாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் திட்டத்திற்கு போட்டியிடும் இரண்டு நிறுவனங்களில் ஒன்றுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜோலி, தென் கொரியாவின் முன்னணி தொழில்துறை குழுமமான ஹன்வா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
தென் கொரியாவின் சியோல் மற்றும் புசான் நகரங்கள், பின்னர் ஜப்பானின் டோக்கியோ நகரம் ஆகியவற்றுக்கு ஜோலி விஜயம் செய்ய உள்ளார்.
ஆட்டோமொபைல் மற்றும் பேட்டரி உற்பத்தி, கப்பல் கட்டும் தொழில், சுரங்கத் தொழில் மற்றும் பாதுகாப்புத் துறை முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
கனடாவின் பாதுகாப்பு கொள்முதல் துறையில் பெரும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
கனடா, தற்போதைய விக்டோரியா வகை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மாற்றாக அடுத்த பத்து ஆண்டுகளில் பணியிலிருந்து விலகவுள்ளதால், மேலும் 12 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்ய முயற்சி செய்து வருகிறது.
இது பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடாவின் மிகப்பெரிய ராணுவ கொள்முதல் திட்டங்களில் ஒன்றாகும்.
அண்மையில், பிரதமர் மார்க் கார்னி தென் கொரியாவிலுள்ள ஹன்வா நீர்மூழ்கிக் கப்பல் உற்பத்தி வசதியைப் பார்வையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.