ரஷ்ய பெண் உளவாளி தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள் !
தன்னை ஒரு நகை வடிவமைப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு ரஷ்ய பெண் உளவாளி, நேட்டோ அதிகாரிகள் உட்பட பலரை 10 ஆண்டுகளாக தன் வலையில் வீழ்த்தியிருக்கிறார் எனும் செய்தி வெளியாகி பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 14ம் திகதி, இங்கிலாந்திலுள்ள சாலிஸ்பரியில் ரஷ்ய முன்னாள் உளவாளியான செர்கே ஸ்க்ரிபால் (Russian ex-spy Sergei Skripal) மற்றும் அவரது மகளான யுலியா ஸ்க்ரிபால் (Yulia Skripal) ஆகியோருக்கு நோவிச்சோக் என்னும் விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 15ம் திகதி, இத்தாலியிலுள்ள Naples என்ற இடத்தில் வாழ்ந்துவந்த மரியா அடீலா குஃபெல்ட் ரிவேரா என்னும் அழகிய இளம்பெண் இத்தாலியிலிருந்து விமானம் ஏறி ரஷ்யாவுக்கு பறந்து விட்டார்.
அதன் பிறகு மரியா என்ன ஆனார் என்பது அவரது நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது.
யார் இந்த மரியா?
பெரு நாட்டவர் என கூறப்படும் இந்த மரியா, ரோம், மால்ட்டா, பாரீஸ் என பல இடங்களுக்குச் சுற்றியிருக்கிறார். இவருக்கு நெருக்கமானவர்கள் பிரித்தானியா முதல் மத்திய கிழக்கு நாடுகள் வரை இருந்திருக்கிறார்கள்.
இத்தாலியிலுள்ள Naples என்ற இடத்தில் குடியமர்ந்த மரியா, அங்கு ஒரு பெரிய நகைக்கடையை திறந்த நிலையில், விலையுயர்ந்த நகைகள், அவரது மதுபான விடுதி ஆகியவை அவருக்கு பெரும் செல்வந்தர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
அது மட்டுமல்லாது நேட்டோ அதிகாரிகள் பலரை தன் அழகைக் காட்டி வீழ்த்தியிருக்கிறார்.
வலையில் வீழ்ந்த நேட்டோ அதிகாரிகள்
அமெரிக்க கப்பல் படை அலுவலர் ஒருவர், தனக்கு மரியா மீது ஒரு கண் என்கிறார். நேட்டோ தலைமையகத்துடன் தொடர்புடைய லயன்ஸ் கிளப் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயலராகும் அளவுக்கு பிரபலமாகியிருக்கிறார் மரியா.
பின்னர் 2012ஆம் ஆண்டு இத்தாலியர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார் மரியா. எனினும் , 2013ஆம் ஆண்டு அவரது கணவர் இறந்துவிட்டார். அதனால் ஏற்பட்ட பரிதாபமும் உதவ, நேட்டோ தூதர்கள் பலருடன் நெருக்கமாகியிருக்கிறார்.
ரஷ்யாவிற்கு தப்பியோட்டம்
இப்படி பிரபலமாக, பெரும் செல்வந்தராக, 10 ஆண்டுகள் பல நாடுகளின் தூதர்கள், அதிகாரிகளுடன் நெருக்கம் காட்டி வந்த மரியா, செப்டம்பர் 15ம் திகதி, அவசர அவசரமாக இத்தாலியிலிருந்து விமானம் ஏறி ரஷ்யாவுக்கு பறக்கிறார்.
அதற்கு முன்தினம்தான் ரஷ்ய முன்னாள் உளவாளியான செர்கே ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகளான யுலியா ஸ்க்ரிபால் ஆகியோருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மரியா என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் Olga Kolobova என்றும், அவர் ஒரு ரஷ்ய உளவாளி என்றும் தெரியவந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.