டொராண்டோ உணவகத்தில் தீ விபத்து குறித்து விசாரணை
கனடாவின், ஸ்கார்பரோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்து குற்றசெயலா? என்ற அடிப்படையில் விசாரிக்கப்படுகிறது என டொராண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர்.
லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் கெனெடி சாலையின் அருகே உள்ள உணவகத்தில் அதிகாலை 2.45 மணியளவில் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது உள்ளே இருந்த ஊழியரின் கூற்றுப்படி, சந்தேகத்திற்கிடமான ஒரு குழுவினர் வலுக்கட்டாயமாக வணிகத்திற்குள் நுழைந்து, கட்டடத்தின் முன்பாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
மூன்று சந்தேகநபர்கள் இடத்தை விட்டு தப்பி ஓடுவது அவதானிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் எல்லா ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேறி விட்டனர் என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீயால் உணவகம் முழுவதும் சேதமடைந்தது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் அருகிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.
தீவைக்கும் செயல் பின்னணியில் உள்ள மூலம் இதுவரை தெரியவில்லை, ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.