அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு
குவைத் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
ஈரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்கா மேற்கொண்ட குண்டுவீச்சுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
கெஷ்ம் தீவில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய குண்டுவீச்சில், கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும், ஜஞ்சான் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், ஈரானின் பல பகுதிகளில் அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு குவைத்தில் அமைந்துள்ள சீன நிறுவனமொன்றின் கட்டடம் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்புகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.