ஈரானின் பயங்கர திட்டம்... எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிகாரிகள்
சவுதி அரேபியாவின் எரிசக்தி உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் முன்னெடுக்க ஈரான் திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த தகவலை சவுதி அரேபியா நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள எரிசக்தி உற்பத்தி மையங்களில் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அமெரிக்கா,
தங்கள் நலன்களையும் பிராந்தியத்தில் உள்ள தங்கள் நட்பு நாடுகளையும் பாதுகாக்க தயங்க மாட்டோம் எனவும் கூறியுள்ளது. மேலும், தற்போது பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ பாதுகாப்பு நிலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என்றும், இருப்பினும், பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக சவுதி அரேபியாவில் அமைந்துள்ள அராம்கோ நிறுவனத்தின் இரு எண்ணெய் ஆலைகள் மீது ட்ரோன் விமானம் மூலமாக தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. குறித்த தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.
இருப்பினும், இதன் பின்னணியில் ஈரானின் சதி இருப்பதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தின. இதனால், ஈரான் - சவுதி அரேபியா இடையே பதற்றம் ஏற்பட்டது.