வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை ; AI நிறுவனங்களுக்கு ஆதரவளித்தால் நடவடிக்கை
ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் சிறுவர்களின் உயிரிழப்புகளுக்குத் துணைபுரிவதாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு மைய நிறுவனங்களுக்கு நிதி, நிலம், மின்சாரம் உள்ளிட்ட எந்தவொரு வளங்களையும் வழங்க வேண்டாம் எனப் பிராந்திய வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகர் மொஹம்மத் பாகர் கலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்கள், முதலீட்டு நிதியங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கும் சிறுவர்களின் உயிரிழப்புகளுக்கும் உதவுவதாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு நிறுவனங்களுக்கு எந்தவிதமான ஆதரவையும் வழங்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இத்தகைய நிறுவனங்களுக்கு நிதி உதவி, பங்குமுதலீடு, நிலம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட வளங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பிராந்தியத்தின் கடல்சார் மற்றும் தொழில்நுட்பத் தரவுகளைக் கண்காணிக்கும் நோக்கில், ‘பெர்சிய வளைகுடா தரவு அதிகாரசபை’ என்ற புதிய அமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என்றும் கலிபாஃப் அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் உளவுப் பணிகளுக்கு உதவும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மற்றும் தரப்பினர், ஈரானின் நேரடி சட்ட மற்றும் இராணுவ அமலாக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்புக்கும் இடையிலான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.