உக்ரைனுக்கு உளவுத் தகவல்களை வழங்கும் அமெரிக்கா
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உக்ரைனுக்கு வழங்கி வந்த மிக முக்கியமான உளவுத்துறைத் தகவல்களை, சிறிய இடைவெளிக்குப் பின்னர் அமெரிக்கா மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskiy) இன்று (18) இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யா தனது நகரங்களை நோக்கி தொடர்ச்சியாக வீசும் அதிவேக பெலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிவதற்கு உக்ரைன் அமெரிக்காவின் உளவுத் தகவல்களையே பெரிதும் நம்பியிருந்தது.

இந்நிலையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில், உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது "நீக்கப்பட்டது என்று கூறினார்.
இதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இப்போது அது மீண்டும் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
உக்ரேனிய அதிகாரிகள் சிலர் ரஷ்யத் தாக்குதல்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி இடம்பெற்றதாகக் கூறியபோதிலும், வொஷிங்டன் இன்னமும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வார ஆரம்பத்தில் கூறியிருந்தமை தெரிவிக்கப்படுகின்றது.