ஹிஜாப் முறையாக அணியவில்லை... இளம்பெண் இறப்பால் வெடித்த கலவரம்
ஈரானில் ஹிஜாப் உடையை முறையாக அணியாததால் பொலிசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு பெண் ஒருவர் இறந்த நிலையில் அங்கு கலவரம் வெடித்துள்ளது.
ஈரானில் பெண்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 22 வயதான ஹமினி என்ற இளம்பெண், தனது குடும்பத்தாருடன், குர்திஸ்தானிலிருந்து தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் ஈரான் அரசின் கீழ் விதிக்கப்பட்டிருந்த ஆடை கட்டுப்பாட்டை பின்பற்றவில்லை என்று அங்கிருந்த பொலிசாரால் விசாரிக்கப்பட்டு, பின்னர் தாக்குதலுக்கு இலக்காகி, கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, உடல் நலம் குன்றியதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹமினி மரணமடைந்துள்ளார். ஆனால் மாரடைப்பால் ஹமினி இறந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பு கூறும் நிலையில், பொலிஸாரின் சித்தரவதையால்தான் தங்களது மகள் இறந்துவிட்டதாக ஹமினியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்த, ஹமினியின் மரணம் ஈரானில் கலவரம் வெடிக்கக் காரணமாகியுள்ளது. ஹமினியின் சொந்த ஊரில் இளம்பெண்கள் பலரும் கூடி தங்களது ஹிஜாப் உடையை தூக்கி வீசி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கலவரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் மீதும் இளைஞர்கள் மீதும் அடக்குமுறையை ஈரான் காவல்துறை கட்டவிழ்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.