கனடாவின் கடற்படையை தீவிரவாத இயக்கமாக அறிவித்த ஈரான்
கனடாவின் கடற்படையை தீவிரவாத அமைப்பாக ஈரான் அறிவித்துள்ளது.
கனடிய அரசு, ஈரானின் இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சி காவல் படை (IRGC)யை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்ததற்குப் பதிலடியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா 2024 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி காவல் படை தீவிரவாத அமைப்பாகப் பட்டியலிட்டது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என ஈரான் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா இஸ்லாமிய புரட்சி காவல் படை தீவிரவாத அமைப்பாக அறிவித்ததையடுத்து, ஈரானில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், வாஷிங்டனின் நிலைப்பாட்டை பின்பற்றும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்குகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் சட்டத்தின் வரம்புக்குள் கனடாவின் ராயல் கனடியன் கடற்படை (Royal Canadian Navy) வருவதாக ஈரான் கருதுவதாகவும், அதன் அடிப்படையில் கனடா கடற்படையை தீவிரவாத அமைப்பாக அறிவிப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பான கேள்விகளை கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறை, வெளிநாட்டு விவகார அமைச்சகத்திடம் (Global Affairs Canada) மாற்றி அனுப்பியுள்ளதுடன், அதற்கு உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே, ஈரான் தனது பிரஜைகளுக்கு மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை நீண்ட காலமாக மறுத்து வருவதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், தேஹ்ரானின் நடவடிக்கைகள் உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன என்றும் கனடா வலியுறுத்தி வருகிறது.