ட்ரம்ப் கூற்றுக்கு ஈரான் கடும் மறுப்பு ; பேச்சுவார்த்தை மறுத்த ஈரான்
அமெரிக்காவினால் நடத்தப்படவுள்ள தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தை ஈரான் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தாம் எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை. இராஜதந்திரத்தை விரும்பினால் வொஷிங்டன் முதலில் மிரட்டுவதை நிறுத்த வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஈரானில் அண்மையில் இடம்பெற்ற போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து, ஈரான் மீது அழுத்தம் கொடுப்பதற்காக ட்ரம்ப் அந்தப் பிராந்தியத்திற்கு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளார்.
ஈரான் தற்போது இக்கட்டான நிலையில் இருப்பதாகவும், தாக்குதலைத் தவிர்க்க அவர்கள் உடன்படிக்கைக்கு வருவார்கள் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், பல்வேறு நாடுகள் இந்த விவகாரத்தில் நல்லெண்ண அடிப்படையில் மத்தியஸ்தம் செய்ய முயற்சிப்பதாகவும், அவர்களுடன் ஈரான் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் அரக்ச்சி ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், பேச்சுவார்த்தை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார். மேலும், இராணுவ அச்சுறுத்தல்களை விடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவது ஒருபோதும் பயன் தராது என ஈரான் தெரிவித்துள்ளது.
சமமான நிலையில், பரஸ்பர மரியாதையுடன் கூடிய பேச்சுவார்த்தையையே தாம் எதிர்பார்ப்பதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.