ஈரான்–அமெரிக்கா புதிய பேச்சுவார்த்தை ; டிரம்ப் நம்பிக்கை வெளியீடு
இஸ்ரேல் - லெபனான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரானுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அடுத்தகட்ட நகர்வை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, ஈரானுடனான அடுத்தகட்ட நேரடிப் பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் நடைபெறக்கூடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்க மற்றும் ஈரான் பிரதிநிதிகளுக்கு இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

எனினும், அதில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரு வார கால தற்காலிக போர்நிறுத்தத்தை நீடிக்கவும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த வார இறுதிப் பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஈரானுடனான போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் எனத் தான் நம்புவதாகவும், இரு தரப்புக்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளைக் களைவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் - லெபனான் எல்லையில் இன்று மாலை முதல் 10 நாள் போர்நிறுத்தம் அமுலுக்கு வரும் நிலையில், ஈரானுடனான இந்தப் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.