ஈரான் –அமெரிக்கா போர் பதற்றம் உச்சத்தில் ; ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் சிகரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரித்து வரும் சூழலில், ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க வேண்டுமானால் ஈரான் இரண்டு விடயங்களைச் செய்ய வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

அதன்படி, ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கைவிட வேண்டும் எனவும், நாட்டில் நடக்கும் போராட்டங்களை ஒடுக்க ஈரானிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் வன்முறைகளை நிறுத்த வேண்டும் எனவும் இரண்டு நிபந்தனைகளை ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.
மேலும், ஈரானிய அரசு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களைக் கொன்று குவித்து வருகிறது. தற்போது ஈரானை நோக்கி எமது பிரம்மாண்டமான மற்றும் வலிமையான போர்க்கப்பல்கள் (Armada) சென்று கொண்டிருக்கின்றன. அவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாதிருப்பதே நல்லது" என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்தநிலையில், ஈரானியப் படைகள் "தமது விரல்களைத் தூக்கியில் வைத்துள்ளன" என்றும், எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாகவும், ஆனால் ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரானிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பித்த போராட்டங்கள், தற்போது ஆட்சிக்கு எதிரான பாரிய நெருக்கடியாக மாறியுள்ளன குறித்த போராட்டத்தில் இதுவரை 6,479 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவற்றில், 118 சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 17,000 உயிரிழப்புகள் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்தச் சூழலில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினரை (IRGC) ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.