கனடாவை உலுக்கும் நிலநடுக்கம் சாத்தியமா?எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்
கனடாவில், பூமிக்கடியில் அமைதியாக மாறி வரும் ஒரு பெரும் பிளவு கோடு தொடர்பாக விஞ்ஞானிகள் கவலையைத் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘டின்டினா பிளவு (Tintina Fault)’ என அழைக்கப்படும் இந்த நிலப் பிளவு, யூகோனிலிருந்து அலாஸ்கா வரை நீளமாகச் செல்லும் ஒரு முக்கிய நிலச்சரிவுப் பகுதி.
சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்த பிளவு மில்லியன் கணக்கான ஆண்டுகளாக அழுத்தத்தை குவித்து வருகிறது.
கடந்த 12,000 ஆண்டுகளாக இது எந்தவித அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், தற்போது இதில் மிகுந்த அழுத்தம் சிக்கி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
LiDAR மற்றும் செயற்கைக்கோள் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய ஆய்வில், தற்போது 6 மீட்டர் அளவிலான அழுத்தம் குவிந்துள்ளதாகவும், இது 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தூண்டும் அளவுக்கு போதுமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டின்டினா பிளவின் நீளம்சுமார் 1,000 கிலோமீட்டர் ஆகும். இது பிரிட்டிஷ் கொலம்பியா வழியாக தெற்கு கனடா வரையிலும் தொடர்கிறது,
மேலும் ஒரு பெரிய பள்ளத்தாக்கை உருவாக்கும் மற்றொரு பிளவுடன் இணைகிறது.
இப்பகுதியில் கடந்த 26 லட்சம் ஆண்டுகளில் பிளவின் இருபுறமும் 1,000 மீட்டர் அளவுக்கு நகர்ந்துள்ளன.
குறிப்பாக 1.36 லட்சம் ஆண்டுகளில், 75 மீட்டர் அளவுக்கு நகர்வு ஏற்பட்டுள்ளது, இது ஆண்டுதோறும் படிப்படியாக நகர்வதை உணர்த்துகிறது.
விஞ்ஞானிகள் தெரிவிப்பதின்படி, இந்த நிலநடுக்கம் நாளை நடைபெறலாம், அல்லது இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகும் நிகழலாம். ஆனால் அதற்கான அழுத்தம் தற்போது போதுமான அளவில் இருக்கிறது என்பதுதான் கவலையின் மையமாக உள்ளது.