ஈரானை வீழ்த்தும் இரவு நாளையா? ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், "ஈரானை ஒரே இரவில் வீழ்த்திவிட முடியும்" என்றும், "அந்த இரவு நாளைய இரவாகக் கூட இருக்கலாம்" என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ட்ரம்ப் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டார்.
ஈரானின் இராணுவ பலம் மற்றும் அதன் உள்கட்டமைப்புகளை மிகக் குறுகிய காலத்தில் செயலிழக்கச் செய்யும் வல்லமை அமெரிக்காவிடம் உள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஈரானின் அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது ஏற்கனவே தாக்குதல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த "ஒரே இரவு" எச்சரிக்கை போரின் தீவிரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
"அந்த இரவு நாளைய இரவாக இருக்கலாம்" என்று அவர் குறிப்பிட்டிருப்பது, எந்த நேரத்திலும் ஒரு பாரிய தரைவழி அல்லது வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் ஏற்கனவே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த வெளிப்படையான எச்சரிக்கை சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த கருத்திற்கு ஈரான் இதுவரை அதிகாரபூர்வமாக பதிலளிக்கவில்லை என்றாலும், வளைகுடா பகுதியில் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக தெஹ்ரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் தனது வான் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.
நாளை (7) செவ்வாய்க்கிழமை இரவுடன் ட்ரம்ப் விதித்துள்ள புதிய காலக்கெடு முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.