பிளைதுபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த தயாரான இஸ்ரேல் ; வெளியான அதிர்ச்சி தகவல்
பிளைதுபாய் விமானத்தை கடத்தும் முயற்சியின்போது, அந்த விமானம் இஸ்ரேல் வான்வெளிக்குள் நுழைந்திருந்தால் அதனை சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேல் இராணுவம் தயாராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பயணித்த பிளைதுபாய் விமானத்தை கடத்தும் முயற்சி அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓமனைச் சேர்ந்த துணை விமானி ஹமால் அல் ஹமாமி விமானத்தை கடத்த முயன்றதாகவும், அதனைத் தடுக்க முயன்ற விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவசரகால பயன்பாட்டுக்காக விமானத்தில் வைக்கப்பட்டிருந்த கோடாரியால் மச்சாரின் தலை, கை, கால்கள், நெஞ்சு மற்றும் மேல் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்போது விமானத்தை கடத்தும் முயற்சி இடம்பெறுவதாக அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விமானம் இஸ்ரேல் வான்வெளிக்குள் நுழைந்தால் அதனை சுட்டு வீழ்த்துவதற்கான நடவடிக்கைக்கு இஸ்ரேல் இராணுவம் தயாராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
விமானம் கட்டடங்கள் மீது மோதும் பட்சத்தில் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, விமானம் இஸ்ரேல் வான்வெளிக்குள் நுழைந்தால் அதனை சுட்டு வீழ்த்துவதற்கான நடவடிக்கைக்கு இராணுவம் தயாராக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விமானம் இஸ்ரேல் வான்வெளிக்குள் நுழையாமல் சவுதி அரேபியாவை நோக்கி திசைதிருப்பப்பட்டதால் பெரும் பேராபத்து தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.