இஸ்ரேல் விமானங்கள் பறக்க தடை ; துருக்கி வெளியிட்ட காரணம் இதுதான்
இஸ்ரேல்-காசா இடையிலான போர் தொடங்கியது முதலே துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு மோசமடைந்து வருகிறது. காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வரை இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக கடந்த ஆண்டு மே மாதம் துருக்கி கூறியது.
இந்நிலையில், இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி முற்றிலும் துண்டிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் பொறுப்பற்ற தாக்குதல்கள்
இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் கூறுகையில், இஸ்ரேலுடனான அனைத்து பொருளாதார மற்றும் வணிக உறவுகளையும் துண்டித்து, இஸ்ரேலிய விமானங்களுக்கு அதன் வான்வெளியை துருக்கி மூடும் என தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றத்தின் அமர்வில் பேசிய அவர், காசா, லெபனான், ஏமன், சிரியா, ஈரான் மீதான இஸ்ரேலின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச ஒழுங்கை மீறும் ஒரு பயங்கரவாத அரசு மனநிலையின் தெளிவான அறிகுறி என தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த வாரம் இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.