இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் உயிரிழப்பு; டிரம்ப் கண்டனம்
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றின் அருகே இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அந்நாட்டு நேரப்படி இரவு 9.05 க்கு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சிக்காக்கோவை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகநபராக அடையாளங் காணப்பட்டுள்ளார்.
டிரம்ப் கண்டனம்
இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அருங்காட்சியம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் மோசமான செயல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் வெளியிட்டுள்ள பதிவில், வாஷிங்டன் டிசியில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் 2 இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை நீதி முன் நிறுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,
இது யூத விரோதத்தை அடிப்படையாக கொண்டது. வெறுப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இதுபோன்ற விஷயங்கள் நடக்கலாம் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது! கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.