ஈரான் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம் “சிங்கங்களின் நாடு” (Nation of Lions) என்ற குறியீட்டுப் பெயரில் ஈரானில் ஒரு முக்கியமான தாக்குதலை மேற்கொண்டதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல், ஈரானின் இராணுவ மற்றும் அணு உள்கட்டமைப்புகளை நோக்கி மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரான் நகரத்தில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் (புதன்கிழமை 23:30 GMT) தொடங்கி பல வெடிப்பு ஒலிகள் கேட்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு
நகரின் பல பகுதிகளில் 6 முதல் 9 வெடிப்புகள் வரை பதிவாகியுள்ளன என உறுதி செய்யப்பட்டுள்ளது. “நான் தனிப்பட்ட முறையில் இரண்டு வெடிப்புகளை கேட்டேன்” என ஒருவரும் தெரிவித்திருக்கிறார்.
ஈரானின் IRIB என்ற அரசுத் தொலைக்காட்சி, இந்த வெடிப்புகளை உறுதி செய்ததுடன் சம்பவங்களைப் பற்றிய வீடியோக்களையும் ஒளிபரப்பியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மிகத் துல்லியமான, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனவும், ஈரானின் அணுத் திட்டத்தைக் குறிவைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா நேரடியாக ஈடுபடவில்லை எனவும், "மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க படையினரின் பாதுகாப்பே எங்கள் முதன்மை கவனமாகும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு பின்னர், இஸ்ரேல் முழுவதும் பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கேற்ப மட்டுமே சேவைகள் இயங்க அனுமதிக்கப்படுவதாகவும், தேசிய பாதுகாப்பு நடைமுறைகளில் உடனடி மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தேஹ்ரானின் இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையம் தாக்கப்பட்டதாக நேரடி தகவல்கள் இல்லை என்றாலும், நகரின் சில குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களைப் படங்களுடன் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, “ஈரானின் அணுத் திட்டங்கள், ஏவுகணை திறன் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை முடக்குவதே எங்கள் நோக்கம். இது தொடரும்” எனவும், “தேசிய பாதுகாப்பிற்காக தேவையான நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.