சீன அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய ஜாக்கி சான்!
அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜாக்கி சான்(Jackie Chan).
ஜாக்கி சான்(Jackie Chan) தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கிய அவர் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் பல திரைப்படங்களை எடுத்துள்ளார். குறிப்பாக, இந்தியாவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே, ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்தியது.
இதை எதிர்த்து ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடிகர் ஜாக்கி சான் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார். இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
சீன திரைப்பட சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான்(Jackie Chan), பீஜிங்கில் நேற்று நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோது ,
சீனா கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதை பல நாடுகளுக்குச் செல்லும்போது நேரடியாக நான் உணர்ந்துள்ளேன். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.
ஐந்து நட்சத்திரங்களை உடைய நமது சிவப்புக் கொடிக்கு உலகம் முழுதும் மரியாதை கிடைக்கிறது. மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது.
எனவே, அக்கட்சியில் உறுப்பினராக சேர தாம் ஆர்வமாக உள்ளதாக ஜாக்கி சான்(Jackie Chan) தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.